சிற்பங்கள் செதுக்குகின்ற சிற்பி யைப்போல்
சித்திரங்கள் வரைகின்ற ஓவி யன்போல்
அற்புதமென் றிவ்வுலகு போற்று கின்ற
அரும்தஞ்சைக் கோயிலினைக் கட்டி யோன்போல்
வற்றாத காவிரியின் நீரைத் தேக்க
வடிவமைத்த கல்லணையின் பொறியாளன்போல்
கற்றைமயிர் களைந்தழகாய் முகத்தை மாற்றும்
கைவிரலோன் முடிதிருத்தும் கலைஞன் என்போன்!
மங்கலமாய் நிகழ்ச்சிகள்தாம் நடப்ப தற்கும்
மணவிழாக்கள் திருக்கோயில் திருவி ழாக்கள்
அங்காடி திறப்புவிழா தொழிற்சா லையில்
ஆயுதங்கள் வழிபாடு செய்வ தற்கும்
இங்குள்ள ஏழையொடு பணக்கா ரர்கள்
இன்முகமாய் அழைத்துமரி யாதை செய்ய
மங்கலமாய் இசைதன்னை இசைப்ப வர்கள்
மங்களாவென் றழைக்கின்ற இசைவே ளாளர் !
முகச்சவரம் செய்வதோடே உடலின் கட்டி
முளையோடே அறுத்தெடுக்கும் சிகிட்சை செய்தும்
தகவான கைநாட்டு வைத்தி யத்தால்
தவிக்கவைக்கும் நோய்களினை விரட்டி விட்ட
மகத்தான மருத்துவரும் நாம்தான் என்று !
மார்தட்டிச் சொல்வதிலே வெட்க மென்ன
திகழ்கின்ற நம்மினத்தை உயர்த்து தற்கே
திரண்டுள்ளோம் ஒற்றுமையாய்ச் சாதிப் போம்நாம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
excellent work
நவ சமாஜ் மென்மேலும் வளரவும் பல சாதனைகள் புரியவும், மனமார்ந்த வாழ்த்துக்கள்.